தெளிந்தார்க்கு சிவனே சிவலிங்கம்:

நமது சிவ வழிபாட்டில் ஒரு சிக்கல் உள்ளது. சிவனை யார் அறியலாம்? யார் அணுகலாம்? யார் அணையலாம்? என்ற கேள்விகள் அடிக்கடி  ஏதாவது ஒரு உருவத்தில் வந்து விடுகிறது. இது கேள்வியே கிடையாது. ஈசனை யாரும் அறியலாம்; அணுகலாம்; அணையலாம்.
இதைத்தான் திருமூலர்
* ஆர்வம் உடையவர் காண்பர்*
அரன் தன்னை
ஈரம் உடையவர் காண்பார்
இணைஅடி.........
என தனது திருமந்திர பாடலில் குறிப்பிடுகிறார்.

யார் உளப்பூர்வமாகவும் ஆர்வமும் அன்பும் உடையவர் களோ அவர்கள் ஈசனை காண்பார்கள்; அவனை அடைவார்கள். ஆனால் எல்லோருக்கும் இது நிகழ்ந்து விடுவதில்லை. காரணம் இறைவன் மதங்களுக்குள்ளும் மடங்களுக்குள்ளும் அடைக்கப் பட்டு நிறுவனமயம் ஆக்கப் பட்டுவிட்டார்.

அதனுடயை விளைவுகள்தான் இறைவனை காண பூசை செய்ய என ஆலயத்திற்குள் எதற்கெடுத்தாலும் கட்டணம்.களவாட முடியாதவரின் உருவம் களவாடப்படுகிறது.

இதைத்தான் திருமூலர் தனது திருமந்திரத்தில்
"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்;
வள்ளல் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்;
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்;
கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே "
என்கிறார்.

ஊன்உடம்பு உள்ளந்தான் கருவறை; வாய்தான் கோபுரவாசல்; இறைவன் உன் சீவன்தான்; உனது ஐம்புலன்கள்தான் ஈசனுக்கு ஏற்றி வைக்கும் விளக்குகள். இவைகளைக்கொண்டு மனிதன் சிறை வைத்திருக்கும் இறைவனை வெளிக் கொண்டு வரவேண்டும்.

"அன்பிற்குண்டோ அடைக்கும்தாள்" அதுபோல
பக்திக்குண்டோ தடைகள்.

இதையே திருமூலர் ஆதாரம் ஆதேயம் என்கிறார். ஆதாரம் என்பது எல்லா வற்றையும் தாங்குவது. ஆதேயம் என்பது அதில் தங்குவது.

இதன்படி ஈசனே ஆதாரம் ஆதேயமான ஏனைய அனைத்து பிரபஞ்சங்களும் அதில் உள்ள உயிர்களை அனைத்தையும் ஈசனே ஆதாரமாக இருந்து தாங்குகிறான். இதை அறியாத மனித மூடர்கள் போலி சாமியார்கள் தாங்கள்தான் இறைவனின் இருப்பை தாங்குவதாக தான் என்ற அகந்தையுடன் இறுமாப்பு கொண்டு அப்பாவி பக்தர்களை ஏமாற்றுகின்றனர்.

எனவே உள்ளத்தையும் உடலையும் தூய்மையாகக் கொண்டு ஒருங்கிணைத்து
ஆணவம், பொறாமை, கோபம்,வெறுப்பு,பெருமை
ஆகியவைகளை நீக்கி, நெஞ்சார வணங்கி வாயார
பாடி எல்லாம் வல்ல ஈசனை வணங்கி அவனருளைப் பெறுவோம் அன்பர்களே.

ஓம்நமசிவாய  சிவாயநமஹ